Home
You Are Here: Home » News » உலக ரத்த தானம் செய்வோர் தினம்

உலக ரத்த தானம் செய்வோர் தினம்

ஒருவர் உயிருடன் இருக்கும் போதே, மற்றொரு உயிருக்கு தானமாக கொடுக்க முடிவது ரத்தம் மட்டும்தான். அதனால்தான், தானத்திலேயே சிறந்த தானம் ரத்ததானம் என்று கூறுகின்றோம்.

இந்நிலையில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும், ஜூன் 14-ம் தேதி ரத்த தான விழிப்புணர்வு நாளாக உலக மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

100 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 30 லட்சம் யூனிட்களுக்கான ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது.

உலக ரத்த தான தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் ரத்த தானம் அளிக்க மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

2012 ஆம் ஆண்டு உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 90 லட்சம் யூனிட் ரத்தமே ஆண்டுக்கு சேகரிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 1 கோடியே 20 லட்சம் யூனிட்கள் என்று கூறியிருந்தது.

தானம் செய்யப்பட்ட ரத்தத்தை 35 முதல் 42 நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆகவே புதிய ரத்தத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு மேலும் 2 சதவீத இந்தியர்கள் ரத்த தானம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எய்ட்ஸ், கேன்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய் இல்லாத யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம் என்பதுமருத்துவர்களின் அறிவுரையாகும்.

நல்ல உடல்நலத்துடன், எடை 45 கிலோவுக்கு மேல் உள்ள, 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம்.

அவ்வாறு ரத்ததானம் அளிப்பதால், நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்காக வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்டுகள் என பயன்படுத்த முடியும். ஆகையால், ரத்த தனம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும்.

இதனிடையே, குமரி மாவட்டம் நாகர்கோவிலில், ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்த மாராத்தான் ஓட்டப்பந்தம் நடத்தப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டி, அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, 9 மணிக்கு நடைபெற்றது. இதனால் அதிகாலை 4 மணிக்கு வந்த மாணவர்கள் பசியால் நீண்ட நேரம் காத்திருந்ததால், ஓட்டப்பந்தத்தின்போது சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.

நமது அரசு ஏனோ, விழிப்புணர்வு பேரணிகள் என்றால், மாணவ, மாணவியர்களை பயன்படுத்துகிறது. ஆனால், அவர்களுக்கு ஏற்படும் சில சிரமங்களையும் அரசும், அரசு நிர்வாகிகளும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது‌போன்ற சமூக சிக்கல்கள் எழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது‌ம் நம் அனைவரின் கோரிக்கையாக உள்ளது‌.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top