Home
You Are Here: Home » News » Karnataka » காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடகத்தின் நலனை காக்க கோரி பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்து‌ள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் பெங்களூரில் இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு இன்று இரவு சுமார் 8 மணியளவில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு செல்கிறது.

இரவு கர்நாடக பவனில் தங்கும் அந்த குழுவினர், நாளை காலை கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக்கட்சி குழுவினர் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top