Home
You Are Here: Home » News » Andhra Pradesh » நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா இன்று‌ உதயமானது‌‌

நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா இன்று‌ உதயமானது‌‌

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திர சேகரராவ் இன்று‌ பதவியேற்கிறார்.

1969ம் ஆண்டு தனித் தெலுங்கானா வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். பிறகு படிப்படியாக இந்தக் கோரிக்கை போராட்டமாக வெளிப்பட, 2009ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்து, ஒரு குழுவை நியமித்தது.

பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு எடுத்தது.

இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்த போதிலும், தெலுங்கானா தனி மாநில மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதையடுத்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா இன்று‌ உதயமாகிறது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் தெலுங்கானா, சீமாந்திரா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து இன்று‌ உதயமாகிற தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் நடக்கும் விழாவில், அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவிப்பிரமாணமும், செய்து வைக்கிறார்.

அவருடன் 15 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.

புதிய மாநிலத்தில் சிறுபான்மையை சேர்ந்த ஒரு தலைவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் முகமுது அலி என்ற எம்.எல்.சி.க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, புதிய தெலங்கானா மாநிலம் உருவாகுவதையொட்டி நேற்று இரவு டிஆர்எஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு புதிய மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மேலும் மாநிலத்தில் உள்ள 10 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தெலு‌ங்கானா மாநிலம் தொடக்கம் கொண்டாடப்படுகிறது.
———-

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top