Home
You Are Here: Home » News » உதகையில் 118-வது மலர்க்கண்காட்சி

உதகையில் 118-வது மலர்க்கண்காட்சி

உதகையில் இன்று 118-ஆவது மலர்க்கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது‌. 3 நாட்களுக்கு நடைபெறு‌ம் இக்கண்காட்சியை காண லட்சக்கணக்கான சுற்று‌லா பயணிகள் ஆர்வமுடன் செல்கின்றனர்.

நீலகிரியில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உதகை மலர்க்காட்சி இன்று‌ தொடங்குகிறது.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், வேளாண்துறை ஆணையர் சந்தீப் சக்சேனா, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்கண்காட்சியையொட்டி அரசினர் தாவரவியல் பூங்கா வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூங்கா நுழைவாயிலிலிருந்து 10 அடி உயரத்தில் 10 அலங்கார வளைவுகள் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

நுழைவுப் பகுதி வண்ணத்துப் பூச்சி இறகுகளைப் போல கொய் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பூங்காவுக்குள் 50 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 60 அடி நீளத்திலும், 10 அடி உயரத்திலும், 8 அடி அகலத்திலும் நீலகிரி மலை ரயிலின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தோடரின மக்களின் வாழ்விடத்தைச் சித்தரிக்கும் வகையில் மலர்களாலேயே தோடர் குடிலும், தோடர் குடும்பத்தினரின் உருவங்களும், சைப்ரஸ் இலைகளைக் கொண்டு தோடர் எருமையின் உருவமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு சிறப்புக் காட்சி அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், மலர்கள் மட்டுமின்றி, காய்கறிகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவையும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மின் வாரியம் சார்பில் நீர் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான விளக்க காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

3 நாள்கள் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top