Home
You Are Here: Home » News » Karnataka » ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிநீதிமன்றம் அறிவித்தது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் வாதிட்டு வருகிறார். கடந்த வாரம் விசாரணை நடைபெற்றபோது இந்த வழக்கு 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் சொத்து குவிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் குமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், மெடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கும் வரை சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் குமார் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

இதற்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை நாளை வழங்குவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். இன்றும் இந்த இறுதி வாதம் நடைபெறவுள்ளது‌ குறிப்பிடத்தக்கது‌.
——

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top