Home
You Are Here: Home » News » India » கேரள ஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம்

கேரள ஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம்

கேரள ஆளுநராக பதவி வகித்த நிகில்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அம்மாநில ஆளுநராக முன்னாள் டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள ஆளுநராக பதவி வகித்த நிகில்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அப்பதவியில் டில்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை ஷீலா தீட்சித் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் , கேரள ஆளுநராக நியமிக்கப்பட இருப்பது குறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஷீலா தீட்சித் டில்லி மாநில முதலமைச்சராக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற டில்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. டில்லி தொகுதியில் போட்டியிட்ட ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக கடந்த 1984-ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, கேரள மாநில ஆளுநராக ஷீலா தீட்சித் விரைவில் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top