Home
You Are Here: Home » News » ஆரணி பகுதியில் அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆரணி பகுதியில் அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆரணி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக, அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகளை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டாரப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக ஆரணி தாசில்தார் மணிமேகலைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தாசில்தார் தலைமையில் 15 பேர் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் விண்ணமங்கலம்‌, மேல்சீசமங்கலம்‌, ரெட்டிப்பாளையம்‌, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்‌.

இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை அனுமதி பெறாமல் மணல் அள்ளிய 17 மாட்டு வண்டிகள், ஒரு டிப்பர் லாரி மற்றும் 2 டிராக்டர்களை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். இதேபோல் நேற்று இரவு திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகளை பிடித்த தாசில்தார் மணிமேகலை, அவற்றை ஆரணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து, மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 32 மாட்டு வண்டிகள், ஒரு டிப்பர் லாரி மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வேலூர் மாவட்டம்‌, திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரி புதூர் பகுதியில் உள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக, திருப்பத்தூர் உதவி ஆட்சியாளர் ஷில்பா பிரபாகருக்கு தகவல் கிடைத்தது.

உதவி ஆட்சியரின் உத்தரவின் பேரில்‌, திருப்பத்தூர் வட்டாட்சியர் ரவீந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் 3 டிராக்டர்களுக்கு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

ஜே.சி.பி இயந்திரம் மற்றும் 3 டிராக்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வாகன உரிமையாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில்‌, கோடியூரைச் சேர்ந்த சங்கர்‌, குமார் மற்றும் குமரேசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. தப்பியோடிய அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top