சுனாமியின் 8ம் ஆண்டு நினைவு தினம்
சுனாமியால் இறந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004ம் ஆண்டு இதே நாளில் சுனாமி என்றழைக்கப்படுகிற ஆழிப்பேரலை எண்ணற்ற உயிர்களை பறித்து சென்றது. உயிர்சேதம் மட்டுமின்றி கடலோர மீனவ கிராமங்களில் பெருத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சுனாமியால் 8ஆயிரம் பேர் உயிரிழந்தனர் இதில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 6 ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்தனர். அங்குள்ள 58 மீனவ கிராம மக்களும் கடலுக்கு செல்லாமல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தரங்கம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால.அருட்செல்வன் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கிறித்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சுனாமியால் உயிரை பறிகொடுத்தவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. மேலமணக்குடியில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இறந்தவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் 8ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். தமிழக அளவில் பல உயிர்களை பறித்த சுனாமி உலக அளவில் 1 லட்சத்து 20ஆயிரம் உயிர்களை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது
