Home
You Are Here: Home » News » Andhra Pradesh » காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி நீர் மேலாண்மை மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை மேற்பார்வைக்குழு கூட்டம் டில்லியில் நேற்று‌ நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்குழுவின் கூட்டம் எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளதால், குறுவை சாகுபடி இல்லை என்ற சூழ்நிலை உருவாகி விட்டதாக காவிரி‌ டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சி்ங் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைப்பதோடு, அதனை அதிகாரிமுள்ள ஆணையமாக உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதி முழுவதும், பாலைவனமாக மாறிவிட்டது என்றும், குறுவை சாகுபடிக்கு காவிரி நதிநீரை பெற்று தருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்திக்காமல் இருந்ததும், காவிரி நதிநீர் தொடர்பாக பேசாமல் இருந்ததும் கவலை அளிப்பதாக தெரிவித்தனர்.

காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்த விவசாய சங்கத்தனர், காவிரி நதிநீரை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை ‌டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top